இஸ்லாத்தில் அழகியலின் பங்கு...
இயற்கை
மார்க்கமான இஸ்லாம் மனிதனது இயல்புக்கும் உள்ளுணர்வுக்கம் மதிப்புக் கொடுக்கிறது.
அவனது ஆற்றல்களையும் உள்ளுணர்வுகளையும் திறமைகளையும் எவ்வாறு பயன்படுத்த
வேண்டுமென்றும் வழிகாட்டுகின்றது. இத்தகைய வழிகாட்டல்கள் இஸ்லாம் மனித இனத்திற்கு
வழங்கிய மகத்தான அருட்கொடைகளாகும். அழகுணர்ச்சியின் வெளிப்பாடுகள் இஸ்லாத்தின்
அடிப்படைகளுக்க முரண்பட்டதாக அமைந்துவிடக் கூடாது என்பதில் இஸ்லாம் அதிக கவனம்
செலுத்துகிறது.
கலையின் உயிர்
சக்தியாக இருப்பது அழகாகும். இஸ்லாம் அழகை விரும்புகிறது “அல்லாஹ் அழகானவன் அவனே
அழகை விரும்புகிறான்”. என்ற நபியவர்களின்
வார்த்தையானது அழகு என்பது ஒரு தெய்வீக பண்பு என்பதனை உணர்த்துகிறது.
அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலும் பிரஸ்தாபிக்கப்படுகின்ற அழகு எனும் பொருளைத்
தருகின்ற ஹுஸ்ன், ஜமால், ஸீனத் முதலிய பதங்கள் அழகியலின் அவசியத்தைப்
பிரஸ்தாபிக்கின்றன. அல்குர்ஆனில் ஸீனத் எனும் பதம் புற அழகைக் குறிக்கப்
பயன்படுத்தப்பட்டிருக்க, ஹுஸ்ன், ஜமால் ஆகிய பதங்கள் புற அழகை மட்டுமன்றி
செயற்பாடுகள், செயற்பாட்டு வழிமுறைகள், மனிதப் பண்புகள் முதலானவற்றில் அழகாக
இருப்பதைச் சுட்டிநிற்கின்றன.
இவ்வகையில்
இஸ்லாம் மனிதனது அழகுணர்வின் வெளிப்பாட்டை தூண்டி கலை வளர்ச்சிக்கு ஊக்கமளித்தது.
அழகியல் அழகியலுக்காக என்ற கருத்தை இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. இதன் காரணமாகவே
முஸ்லிம்கள் அழகுணர்வையும், கலை முயற்சிகளையும் இறைவனை நினைவு படுத்தி அவனது
நன்னெறியில் நடப்பதற்கு துணை செய்யும் வகையில் மனிதனுக்கு வழங்கப்பட்ட
அருட்கொடையாக கருதினர். இவ்வகையில் அழகு என்பது (உண்மை, நன்மை, பயன்பாடு
என்பவற்றின் அடிப்படையில் நோக்கப்பட வேண்டியதாகும். மக்களை நல்வழிப்படுத்துவதற்காக
தீமைக்கு இட்டுச் செல்லாததாக அழகு அமைய வேண்டும்.
இவ்வகையில்
மக்களை வழிகெடுக்கும் கவிஞர்கள் அல்லாஹ்வின் பழிப்புரைக்குள்ளாகின்ற அதே வேளை
அல்லாஹ்வை விசுவாசிக்கும் கவிஞர்கள் பாராட்டப்பட்டுள்ளனர். இவ்வகையில் நபி (ஸல்)
அவர்கள் சில கவிஞர்களைப் பாராட்டி, கௌரவித்துள்ளதனை நாம் அவதானிக்கலாம்.
மனிதனுக்கு அவனது
கருத்துகளை வெளியிடும் ஆற்றலையும், கலைப் பொருள்களின் அமைப்பில் அவனது அழகுணார்வை
புலப்படுத்தும் ஆற்றலையும், இறைவன் அவனுக்கு அளித்துள்ளான. எனவே மளிதனின் அனைத்து
செயற்பாடுகளையும் அழகாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது இஸ்லாத்தின் போதனையாகும்.
[அவனே மனிதனை சிருஷ்டித்தான். அவனே மனிதனுக்கு தெளிவாக பேசவும் கற்பித்தான்” என அல் குர்ஆன் குறிப்பிடுகிறது.
அழகு என்பது
வணங்கப்படும் பொருள் என்ற கருத்து இஸ்லாமிய அடிப்படையில் தவறானதாகும். மேலும்
இஸ்லாமிய அழகியலின் பண்பு என்னவெனில், இறைவனுக்கு மனித வடிவத்தினைக் கொடுக்கின்ற
கலை வடிவங்கள் முற்றாக நிராகரிக்கப்படுவதாகும். ஜாஹிலிய்யாக் காலத்தில் சிற்பமும்
ஓவியமும் சிலை வணக்கத்தை வளர்ப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டன. தௌஹீத் கோட்பாட்டை
வளர்ப்பதற்கு அவை இடையூறாய் அமைத்தன. எனவே அவ புறக்கணிக்கப்பட்டதனை நாம் காணலாம்.
இதனால் சிற்பக் கலை உருவமைப்பு சார்ந்த ஓவியங்கள் என்பவற்றுக்கு இஸ்லாத்தில்
முக்கியத்துவம் கிடைக்காமல் போனதுடன் ஏனைய அழகியல் கலைகள் முஸ்லிம்களால்
வளர்க்கப்பட்டன.
வடிவு,
பூரணத்துவம், விகிதசமம், ஒழுங்கு, இணக்கம், தவறின்மை என்பன ஒரு படைப்பில் இணைகின்ற
போது அழகு தோன்றுகின்றது. இறைவனின் படைப்புகளான புவி, விண்வெளி, தாவரங்கள்,
பறவைகள், மிருகங்கள், மனிதர்கள் முதலான படைப்புகளில் இப் பண்பகள்
ஒருங்கிணைந்திருப்பதனாலேயே இவற்றில் அழகு தென்படுகின்றது. இவ்வாறே மளித
உணர்வுகளும் எண்ணக்கருக்களும் வரைகோடுகள், நிறங்கள், ஒலிகள் முதலானவையூடாக
மேற்குறித்த பண்புகளுடன் புலப்படுத்தப்படும்போது அவை அழகியற் கலை வடிவங்களாகப்
பரிணமிக்கின்றன. மேற்கத்தேய நோக்கில் மிகக் குறைந்தளவு முக்கியத்துவத்தைப்
பெறுகின்ற நுண்கலைகள் இஸ்லாமிய நோக்கில் மிகச் சிறப்பிடத்தைப் பெறுகின்றன.
இவ்வகையில் அறபு எழுத்தணிக்கலை,
அறபு அலங்காரக் கலை, மட்பாண்ட அலங்காரம், தளவிரிப்பு அலங்காரக் கலை முதலிய நுண்கலை
வடிவங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. அரபு எழுத்தணிக் கலை, அரபெஸ்க் எனப்படும்
எழுத்து அலங்காரக் கலை முதலியவை முஸ்லீம்களால் வளர்த்தெடுக்கப்பட்ட தனித்துவமான
கலை வடிவங்களாகும். கட்டடங்கள், பள்ளிகளின் மினாராக்கள், குப்பாக்கள், சுவர்கள்
என்பவற்றில் மட்டுமன்றி புத்தக அட்டைகள், தள விரிப்புகள், மட்பாண்டங்கள், உலோகப்
பொருட்கள், பாவனைப் பொருட்கள், மாணிக்கக் கற்கள், ஆடைகள் முதலானவற்றை அழகுபடுத்த
தாவர வடிவங்கள், அரபு எழுத்தணி எனபவற்றை முஸ்லிம்கள் உபயோகித்தனர்.
இஸ்லாமிய சமூக
அமைப்பில் கலைஞன் என்பவன் பயனுள்ள பொருட்களை உற்பத்தி செய்பவனாவான். வாழ்க்கையின்
எல்லாத்துறையிலும் அவளது அழகுணர்வும், கலையார்வமும் தொழிற்படுவதை நாம்
அவதானிக்கலாம். ஆடைகளை அழகாய் வைத்துக்கொள்வதும் வீட்டை அழகாக வைத்திருப்பதும்
அழகுணர்ச்சியின் வெளிப்பாடுகளாகும். (செய்கின்ற எவ்வொரு வேலையையும்
நேர்த்தியாகவும் அழகாகவும் செய்யவேண்டுமென இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. அஹ்ஸனுல்
கஸஸ் (அழகிய கதைகள்), அஹ்ஸனுல் குலுக் (அழகிய பண்பாடுகள்), அஹ்ஸனு அமல் (அழகிய
செயற்பாடு). அஹ்ஸனுல் கௌல் (அழகிய வார்த்தை) முதலிய அல்குர்ஆன் பயன்படுத்துகின்ற
பிரயோகங்கள் இக் கருத்தையே வலியுறுத்துகின்றன.
இவ்வகையில்
முஸ்லிம்களால் காம உணர்வையோ திய செயல்களையோ தூண்டாத இஸ்லாமிய சிந்தனைகளுக்கு
முரண்படாத, அடிப்படை இஸ்லாமியக் கடமைகளுக்குத் தடையாக அமையாத இசைக் கலை
அனுமதிக்கப்படுவதை நாம் அவதானிக்கலாம். இஸ்லாமியக் கட்டிடக் கலையை
எடுத்துநோக்கினாலும் இந்த அடிப்படைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அது
வளர்த்தெடுக்கப்பட்டிருப்பது அவதானிக்கத்தக்கதாகும்.
Comments
Post a Comment