இஸ்லாமிய நாகரீகமானது அதனை பிற சமூக, சமுதாய, நாகரீகங்களுடன் ஒப்பிடுகின்ற போது பல் சிறப்பியல்புகளைக் கொண்டு விளங்குவதை அவதானிக்கலாம்.
அச் சிறப்பியல்புகளைப் பின்வருமாறு நோக்கலாம். இஸ்லாமிய நாகரிகம் அல்லாஹ்வினால் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டல் நடைமுறை மூலம் திட்டமிட்ட அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இத் தனித் தன்மை மானிட சமூகத்தில் எவ்விதச் இடைச் செருகல்களும் இன்றி மனிதனின் மனோ இச்சைக்கு அப்பாற்பட்ட நிலையில் இருந்து வழி காட்டுகின்றது.
இஸ்லாம் என்ற விரிந்த, செறிவான கொள்கைத் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த ஓர் நாகரிகமாக விளங்கி வருகின்றது. ஏனைய நாகரிகங்களை நோக்கின் அவை யாவும் தீர்க்க தரிசனமற்ற முறையில், திட்டமிட்ட அடிப்படையில் உருவாக்கப்பபட்டது. வதிவிடம், அரசியல் செல்வாக்கு, பிற கலாசாரத் தாக்கம் என்பவற்றின் துணை கொண்டு சுயமாக உருவாகி இருப்பதைக் காணலாம். இஸ்லாம் என்ற சொல்லே ஒரு பொதுவான சொல்லாக அமைந்து இதன் சிறப்பை வெளிப்படுத்துகின்றது.
இஸ்லாமிய நாகரிகம் சகல துறைகளிலும் வழிகாட்டல்களை வழங்கும் நாகரிகமாக உள்ளது. ஏனெனில் ஏனைய நாகரிகங்கள் வாழ்வின் சில துறைக்களுக்கே அதன் வழி காட்டல்களை வழங்குகின்றன. ஆனால் இஸ்லாமிய நாகரிகம் மனிதனது ஆத்மீக தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்று லௌகீகத் தேடல்களுக்கும் வழிகாட்டுகின்றது. வெறும் ஆத்மீகத் தேவைகளுக்கு மாத்திரம் இடமளிக்காது லௌகீகத்திற்கும் - ஆத்மீகத்திற்கும் நெருங்கிய அறுபட முடியாத தொடர்பு இருப்பதாகக் கூறுகின்றது. ஏனைய நாகரிகங்களானது தனது ஆத்மீகத்தை சமயத்தில் இருந்து வேறாகவும், லௌகீகத்தை சமயத்தில் இருந்தும் வேறாகவும் பிரித்து விடுகின்றது.
இஸ்லாமிய நாகரிகம் மனித வாழ்வை நெறிப்படுத்துவதில் அடிப்படை அம்சங்களைக் கொண்டு அவனைச் சீரிய வழியில் செலுத்துகின்றது. ஏகத்துவம், இறைத்துாது, மறுமை போன்ற அடிப்படையான விடயங்களைப் போதித்து அவனது போக்கை சிறப்புறச் செய்கின்றது. ஏனைய நாகரிகங்கள் இச் சிறப்பியல்பை கொண்டிராதலால் மனிதனது வாழ்வு சீரழிந்து விடுகின்றது. ஏகத்துவம், இறைத்துாது, மறுமை பற்றிய அம்சங்கள் இல்லாத சமூகம் பிறருக்கு அடிமைப்பட்டு தன்னைத் தானே இழிவுபடுத்தி, வழி தவறி, நெறி பிறழ்ந்து, மனோ இச்சைக்கு அடி பணிந்து சீரழிந்து விடும் என்பது வரலாறு கூறும் மறக்க முடியாத உண்மையாகும்.
இஸ்லாமிய நாகரிகம் மனிதனை மையமாக கொண்டு செயல்படுகின்ற நாகரிகமாகும். இதன் அடிப்படையிலேயே திருமறையின் பல இடங்களில் இக் கருத்து இழையோடியிருப்பதை ஆய்வோர் நன்கறிவர். அதாவது அல்லாஹ் மனிதனை தனது பிரதிநிதி என்ற அந்தஸ்த்தில் வைத்துள்ளான். அப் பிரதிநிதித்துவத்தை நிறைவு செய்யும் வகையில் அறிவு, சிந்தனை, சுதந்திரம் போன்ற உரிமைகளை மனிதனுக்கு வழங்கி இருப்பது நினைவு கூரத்தக்கதாகும். அதே நேரத்தில் மனிதன் தன் பிரதிநிதி என்ற வகையில் அவனுக்கு கொடுக்கப்படும் சுதந்திரம், அருட்கொடை போன்றவற்றைத் துஷ்பிரயோகம் செய்வதை வன்மையாக கண்டித்து, மறுமை பற்றி ஞபாகமூட்டி சுவனத்தின் பிரதிநிதி எனும் அந்தஸ்த்தில் இருந்து தவறாமல் பாதுகாக்கின்றது.
இஸ்லாமிய நாகரிகம் சர்வதேச மயமானது. அது சர்வ காலத்திற்கும், சர்வ இடத்திற்கும் பொருந்தும் தன்மை கொண்டு திகழ்கின்றது. இதன் சமய, சமுக, அரசியல், பொருளாதாரக் கோட்பாடுகள் காலச் சுழற்சிக்கு ஈடு கொடுத்து மாறாத்தன்மை கொண்டவைகளாகக் காணப்படுகின்றன. ஏனைய நாகரிகங்களை அவதானித்தால் அத் தனித்தன்மை அவைகளிடம் பூச்சியத் தன்மையையே பெற்றிருக்கும். அதாவது அவற்றின் சமய, சமுக, அரசியல், பொருளாதாரக் கோட்பாடுகள், போதனைகள் காலச் சுழற்சிக்கு முகம் கொடுக்க முடியாத அல்லது பொருந்தாத் தன்மைகள் காரணமாக காலத்திற்கு ஏற்ற முறையில் மாற்றி அமைக்கப்பட வேண்டிய நிலை காணப்படுவதை அவதானிக்கலாம்.
இஸ்லாமிய நாகரிமானது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சௌஜன்யம் என்னும் உயர் பண்புகளைக் கொண்டது. இது இன, மத, பிரதேச, பால் வேறுபாடுகளை ஒரு அணுவளவும் ஏற்பதில்லை. மனிதர்கள் எல்லோரையும் மதிக்கின்ற, மகோன்னதப்படுத்துகின்ற நாகரிகமாகக் காணப்படுகின்றது. ஏனைய நாகரிகங்களில் இந்நிலையைக் காண முடியாதுள்ளது. மேலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டைப் போதிக்கின்றது. தவறு செய்வது எவராக இருந்தாலும் பக்கச் சார்பின்றி அதற்கான தண்டனை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்துகின்றது.
இஸ்லாமிய நாகரிகமானது ஆண் -பெண் இரு பாலாருக்குமான போதுமான பொருத்தமான உரிமைகளை வழங்கியுள்ளது. ஏனைய நாகரிகங்கள் பெண்களுக்கு சில உரிமைகளையே அல்லது அறவே எவ்வித உரிமைகளையும் வழங்காத நிலையைக் காண முடியும். ஆனால் இஸ்லாமிய நாகரிகம் அவ்வாறில்லை. ஆண் பெண் சகலருக்குமான உரிமைகளை தாராளமாகக் கொடுத்துள்ளது.
ஆகவே இஸ்லாமிய நாகரிகம் மேற்கூறிய பல சிறப்பியல்புகள் காரணமாக ஏனைய நாகரிகங்களில் இருந்து வேறுபட்டு தனித்தன்மையுடையதாக விளங்குவதனை பக்கச் சார்பற்ற முறையில் சிந்திக்கும் எவரும் ஏற்றுக்கொள்வர்.
Comments
Post a Comment