உமையா ஆட்சின் தோற்றம்
![]() |
முஆவியா (ரழி) அவர்களால் ஹிஜ்ரி 41ல் உமையா கிலாபத் தோற்றுவிக்கப்பட்டது.
அறேபியாவில் குறைஷிக்குலத்தினர் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு குலத்தினர்களாக காணப்பட்டனர்.
அக்குலத்தில் முக்கிய ஒருவராக விளங்கிய அப்துல் மனாப் என்பவருக்கு ஹாஷிம், அப்துஷ்ஷம்ஸ் எனும் இரு புத்திரர்கள் இருந்தனர். இவர்களில் ஹாஷிமுடைய சந்ததியினர் ஹாஷிமியாக்கள் எனவும், அப்துஷ் ஷம்ஸுடைய மகனாகிய உமையாவுடைய சந்ததியினர் உமையாக்கள் எனவும் அழைக்கப்பட்டனர்.
அலி (ரழி) அவர்களுக்குப் பிறகு உமையா வம்சத்தினர் ஆட்சியைக் கைப்பற்றியதால் அவர்களது ஆட்சிக் காலத்தை உமையா கிலாபத் என அழைப்பர்.
நபி (ஸல்) அவர்களின் காலத்திலிருந்தே உமையா பிரமுகர்கள் பலர் பல முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டு வந்துள்ளனர்.
உதாரணமாக
🔴 உமையாவின் பேரரான அபூஸுப்யானுக்கு மகனாகப் பிறந்த முஆவியா (ரழி) நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வஹீ எழுதுபவர்களில் ஒருவராகக் கடமையாற்றினார்.
🔴 முதலாம் கலீபா அபூபக்கர் (ரழி) அவர்கள் உதவிப்படையொன்றின் தளபதியாக இவரை நியமித்து சிரியாவுக்கு அனுப்பி வைத்தார்கள்.
🔴 உமர் (ரழி) இவரை சிரியாவிலுள்ள ஜோர்தான் எனும் மாவட்டத்திற்கு அதிபதியாக நியமித்தார்.
🔴 உஸ்மான் (ரழி) யின் ஆட்சிக் காலத்தில் சிரியா முழுவதற்குமான மாகாண கவர்ணராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து பல வருடங்கள் சிரியாவில் பணி புரிந்து மக்கள் நலன்களில் பங்கெடுத்ததால் மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த முஆவியா (ரழி) உஸ்மான் (ரழி) யின் கொலையைத் தனது அரசியல் எதிர்காலத்துக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினார். இதனால் உஸ்மான் (ரழி) யின் கொலைகாரர்களைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கலீபா அலி (ரழி) அவர்களுடன் சிப்பீன் களத்தில் போரிட்டார்.
நான்காவது கலீபா அலி (ரழி) அவர்கள் ஹிஜ்ரி 40ல் கொலை செய்யப்பட்டதும் அவர்களது மகன் ஹஸன் (ரழி)யை கூபா நகர மக்கள் கலீபாவாகத் தெரிவு செய்து அவருக்கு பைஅத் செய்தனர். மக்கா, மதீனா மக்களும் இத்தெரிவை அங்கீகரித்திருந்தனர்.
இந்நிலையில் சிரியாவில் தன்னைத்தானே கலீபாவாகப் பிரகடனப்படுத்தியிருந்த முஆவியா (ரழி) இராச்சியம் முழுவதற்கும் தானே கலீபாவாக வேண்டும் என்ற நோக்கில் கூபாவை நோக்கி படையெடுத்து சென்றார்.
இதையறிந்த ஹஸன் (ரழி) யுத்தத்தை விரும்பாது முஆவியா (ரழி)யுடன் சமாதான உடன்பாடு செய்து ஆட்சிப் பொறுப்பை அவருக்கு விட்டுக் கொடுத்தார். அது முதல் முஆவியா (ரழி) இஸ்லாமிய இராச்சியம் முழுவதினதும் கலீபாவானார்.
மிகச் சிறப்பான முறையில் தனது ஆட்சியை மேற்கொண்டு வந்த அவர் தனது மரணத் தறுவாயில் தனது மகன் யஸீதை கலீபாவாக்கியதன் மூலம் உமையாக்களின் பரம்பரை ஆட்சியைத் தோற்றுவித்துக்கொண்டார்கள்.
Paragahakotuwa
Comments
Post a Comment